சென்னை: சென்னை கீழ்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை அருகே, போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு, 2020ஆம் ஆண்டு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஆர்ம்ஸ் சாலையில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி, ஒருவரைப் பிடித்துள்ளனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் சவுகார்பேட்டை முருகப்பன் தெருவைச் சேர்ந்த மெஹுல் பாப்னா என்பதும், டூவீலரில் வந்து பாலிதீன் கவரை வழங்கிவிட்டு தப்பியோடியவர் சாலி கிராமம் ஆற்காடு சாலையைச் சேர்ந்த அகில் அகமது என்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்த கவரில், 1.83 கிராம் எடையுள்ள 91 எல்.எஸ்.டி என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
இதன் மீதான வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி பின் கைதான அகில் அகமது, ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதானவர் என்பதை அரசுத் தரப்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.
வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 1.70 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து” தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: சொத்துக்காக பெற்றோரை கொலை செய்தால் வாரிசுகளுக்கு சொத்தில் உரிமை உள்ளதா? சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன? - Parents Murder For Property