சென்னை: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஹரிஷ், நேற்று மதியம் அவரது வீட்டின் வெளியே சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வளர்ப்பு நாய் ஒன்று ஹரிஷ் குமாரை கடித்து குதறி உள்ளது.
இதில் அவர் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹரிஷின் கூச்சல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நாயிடம் இருந்து சிறுவனை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேசீன் பிரிஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்பவர் வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அது கடித்து குதறியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நாயின் உரிமையாளர் ஸ்டெல்லா, பிரித்தா உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது பேசின்பிரிஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஸ்டெல்லாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாய் வளர்ப்புக்கு அவர் உரிய அனுமதி பெற்றுள்ளாரா?, நாய்க்கு முறையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நுங்கம்பாக்கம் பகுதியில் 5 வயது சிறுமி மற்றும் அவரது தாயை நாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் சென்னை சூளைமேடு பகுதியில் சாலையோரமாக நடந்து சென்ற தம்பதியை, தெரு நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் அவர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற சம்பங்களை தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நாய் வளர்ப்புக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளதுடன், பல அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாய் கடித்தால் பெயில், மனிதன் தாக்கினால் ஜெயில்! சட்டம் கூறுவது என்ன?