சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்றக் காவலை மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஜனவரி 25ஆம் தேதி தனிப்படை காவல் துறையினரால் ஆந்திராவில் வைத்து ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகிய இருவரைக் கைது செய்து சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இருவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் (பிப்.23) முடிவடைய உள்ள நிலையில் புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரின் நீதிமன்றக் காவலையும் மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு; கோவை நீதிமன்றத்தில் வீடியோக்கள் வைத்து விசாரணை தொடக்கம்..