சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்த பூங்காவனம் என்பவருக்கும், அவருடன் வேலை செய்து வந்த அழுக்கு குமார் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. அது கைகலப்பாக மாறிய நிலையில், பூங்காவனத்தின் தலை மற்றும் மார்பில் கல்லைப் போட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு குமார் கொலை செய்துள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, கொருக்குப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த குமாரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கிய 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம், “காவல்துறை விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டு சாட்சியம் அளித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட குமார் மீதான கொலைக் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அந்நபருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து” தீர்ப்பளித்தார். மேலும், கொலை செய்யப்பட்ட பூங்காவனத்தின்
குடும்பத்துக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் அரசிடம் இருந்து கிடைக்க சட்டப் பணிகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு மனைவி மீதான வழக்கு முடித்து வைப்பு! - Minister EV Velu Wife Case