சென்னை: பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக யூடிபர் சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரில் கோயமுத்தூர் சைபர் க்ரைம் போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அன்றைய தினமே அவரது காரில் கஞ்சா இருந்ததாகக் கூறி, தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் மேலுமொரு வழக்கை பதிந்து சவுக்கு சங்கரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் இந்த கஞ்சா வழக்கில் அவரது கார் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் மீதும் வழக்குப் பதியப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், திருச்சி காவல் துறையினரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி பத்திரிகையாளர் சந்தியா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்து அதுதொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறாக, ஏற்கெனவே ஐந்து வழக்குகள் சவுக்கு சங்கர் கைது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆறாவதாக ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அதிகாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.அதில்,'கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ ஆவணங்களைப் போலியாக தயாரித்து, அதுதொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை சவுக்கு சங்கர் வெளியிட்டார்' என்று தெரிவிக்கப்ட்டிருந்தது.
இந்த புகார் தற்போது சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்தல், அதன் மூலம் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கைது நடவடிக்கை நகலும் வழக்கின் நகலும் கோவை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கோவை சிறையில் இருந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சவுக்கு சங்கர் அழைத்துவரப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு!