சென்னை: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 12-வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சாலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிவேல் திரையரங்கம் இருந்து வருகிறது. இதில் வெற்றி மற்றும் வேலன் என இரண்டு தியேட்டர்கள் இயங்கி வருகிறது.
இதில் தற்போது விஜய் நடிப்பில் வெளியான “கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் வெளியாகி தினம்தோறும் நான்கு காட்சிகள் ஒளிபரப்பபட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து தியேட்டரின் உரிமையாளர் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 60 லட்சம் ரூபாய் வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
எனவே இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்கின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியும் பலமுறை நேரில் சென்று கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் வரி செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், நங்கநல்லூர் வெற்றிவேலன் திரையரங்கிற்கு நேரடியாக சென்று திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் படம் பார்க்க வந்த பொது மக்களை வெளியே அனுப்பிவிட்டு, இரண்டு திரையரங்கிற்கும் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டு மின் இணைப்புகளை துண்டித்து சென்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் கோட் பட ரிலீஸ்; நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்!
மேலும் இன்று காலை 10 மணி காட்சிக்கு டிக்கெட்கள் முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் அதிக பேர் திரையரங்க முன்பு குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.