சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாகப்பட்டினத்தின் கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கு 300 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
இது வடமேற்கு திசையில் தற்பொழுது நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணி நேரமாக, 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது தற்போது புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையான வட தமிழகம் நோக்கி நகர்கிறது.
ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே நாளை கரையை கடக்கும் வகையில் நோக்கி நகர்கிறது. புயல் கரையை கடக்கும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக இன்று (நவ 29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும். நாளை கரையைக் கடக்கும் நேரத்தில், வட தமிழ்நாடு மாவட்டங்களான (7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு : புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், " தென்மேற்கு பகுதியில் நிலைக்கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த வரும் சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை (நவ 29) பிற்பகல் காரைக்கால் - மகாபலிபுரத்திற்கு இடையே கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புயல் கரையைக் கடக்கும் போது, பலத்த காற்று மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் வேகத்தில், அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்