சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில், ரிப்பன் மாளிகையில் இன்று (ஆக.29) நடைபெற்றது. இதில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாமன்றக் கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பேசுகையில், “அயோத்தி என்றால் அத்வானி பெயர் தான் ஞாபகம் வரும். எனவே, அயோத்தியா மண்டபம் இருக்கும் சாலைக்கு அத்வானி பெயர் வைக்க வேண்டும். அதேபோல், இந்தியா முழுவதும் சாலை போட்ட வாஜ்பாய் பெயரை ஒரு சாலைக்கு வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
எனது ஒன்றரை வருட கோரிக்கையை முதலமைச்சரிடம் நேரடியாக தெரிவித்தேன். அதனை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். கருணாநிதி பெயரில் நாணயம் வெளியிடுவதில் பெருமை. அது செய்ய வேண்டியது எங்கள் பெருந்தன்மை. மரியாதை கொடுக்க வேண்டிய இடங்களில் நாங்கள் கட்டாயம் மரியாதை கொடுப்போம் “ என்றார்.
அப்போது குறுக்கிட்ட திமுக மன்ற உறுப்பினர்கள், “மரியாதை எல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால், நிதி தான் கொடுக்க மாட்டுக்கிறீர்கள்” என்றனர். இதற்கு உமா ஆனந்த் அவையில் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் நன்றாக இருக்கிறது என்று பெற்றோர் கூறியுள்ளனர். அதனையும் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். தனது வார்டுகளில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறார்கள். சில நாடுகளைத் தவிர பிரெஞ்சு மொழி பேசுவதில்லை.
நாட்டின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும் உதவும். சென்னை மாநகராட்சி சார்பில் பிரெஞ்சு மொழி சொல்லிக் கொடுக்கும் போது, இந்தி சொல்லிக் கொடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்தி பிரச்சார சபாவில் இந்தி கற்றுக் கொள்ளலாம். அப்படி செய்தால் மத்திய அரசின் பதவிகளுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
இதற்கு திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பிரெஞ்ச் மொழி கட்டாயம் என்றில்லை. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறோம். பிரெஞ்சு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் மாணவர்களிடம் திணிக்கவில்லை என்று மேயர் பிரியா பதில் அளித்தார்.
சென்னை மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- வள்ளுவர்கோட்டத்தில் மேம்பாலம் கட்டும் பணியை, மெட்ரோ ரயில் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தி முடிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படும். நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தவிர்த்து, மீதமுள்ள நிதியை மாநகராட்சியின் மற்ற மேம்பாலம் கட்டும் பணிக்கு பயன்படுத்த வேண்டும்.
- சென்னை மாநகராட்சி முழுவதும் 65 TATA ACE அல்லது அதற்கு இணையான வாகனங்களில் கொசு மருந்து அடிக்க ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- மண்டலம் 4, 8 ஆகியவற்றில் குப்பை சேகரம் செய்யும் பணியினை தனியாருக்கு வழங்கவும், ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியினை 4 ஆண்டுகள் கண்காணிக்க 19.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் மற்றும் அதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- சென்னை மாநகராட்சியில் புதிதாக 81 பேருந்து பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு 8.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- காவல்துறையில் உள்ளது போன்று, சென்னை மாநகராட்சியிலும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே அதிநவீன முறையில் wireless connection முறையை மேம்படுத்த 9.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- தமிழறிஞர் ஒளவை நடராசன் நினைவாக, அவர் இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மைச் சாலைக்கு ஔவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டப்படும்.
- சென்னை மாநகராட்சியில் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் புதிதாக கட்டுவதற்கு தேவையுள்ள இடங்களில் மழைநீர் வடிகால் கட்ட அனுமதி.
- அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
- மாநகராட்சிக்குச் சொந்தமான மயானங்களில் எரிவாயு தகன மேடை அமைத்து பராமரிக்கப்படும்.
- மாநகராட்சியில் பணி செய்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அறிவித்தப்படி, அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இதையும் படிங்க: “அமெரிக்க தொழில்நுட்பத்தால் கூவம் ஆறு மறுசீரமைக்கப்படும்”- மேயர் பிரியா உறுதி!