சென்னை: இஸ்கான் கிருஷ்ணர் திருக்கோவிலில் புஷ்ப அபிஷேக நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராதாகிருஷ்ணர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் புஷ்ப அபிஷேக திருவிழா நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (மே 12) ஸ்ரீ ராதாகிருஷ்ணர் திருக்கோவிலில் மாலை 6:00 மணி முதல் இரவு 10 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணருக்கு புஷ்ப அபிஷேக திருவிழா நடத்தப்பட்டது.இதில் பக்தர்கள் பகவான் கிருஷ்ணரின் மீதான பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு வண்ண மலர்களால் அவருக்கு மலர் அபிஷேகம் செய்தனர். மேலும் புஷ்ப அபிஷேக திருவிழாவின்போது, பக்தர்களின் காதிற்கும் கண்ணிற்கும் விருந்தளிக்கும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணர் ரம்யமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேலும் பக்தர்கள், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை 'ஹரே கிருஷ்ணா' நாமத்தைப் பாடியப்படி, ஒருவரின் மீது ஒருவர் தூவி மகிழ்ந்தனர். புஷ்பாபிஷேகத்தை தொடர்ந்து கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாத மலர்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இறுதியில் அனைவருக்கும் பக்தி மற்றும் ஆன்மீக நிறை வழங்கும் கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்கான் கோவில் நிர்வாகி ரங்க கிருஷ்ணா தாஸ் கூறுகையில், “அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இஸ்கான் மங்களகரமான புஷ்பா அபிஷேக நிகழ்வை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது. புஷ்பா அபிஷேகம் பக்தர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது,இது இறைவனுக்கும் பக்தருக்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் குறிக்கிறது. உணர்வுகளின் உணர்திறனுக்காக அறியப்பட்ட பகவான் கிருஷ்ணர், அன்புடன் செய்யப்படும் எளிய பிரசாதங்களைக்கூட மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார். திருவிழாவின்போது, சுவாமிக்கு நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வண்ணமயமான மற்றும் மணம் கொண்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது, தெய்வத்தைக் கண்கவர் மலர் காட்சியாக மாற்றியது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திரெளபதி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற துரியோதனன் படுகளம்! - Droupadi Amman Temple