சென்னை: கடந்த 1996ஆம் ஆண்டு மே 13 முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் சொத்து சேர்த்ததாக, அப்போதைய அமைச்சராக இருந்த க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து, வேலூர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவின்படி மாற்றப்பட்டது. இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுதலை செய்து 2023 ஜூன் மாதம் வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 19 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும். இருவரையும் விடுதலை செய்த ஓய்வுபெற்ற வேலூர் நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா பிப்ரவரி 23ஆம் தேதி நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வாதங்களை முன்வைக்கலாம் எனத் தேதிகளைக் குறித்து இருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கைப் பிப்ரவரி 19 முதல் 22 வரை விசாரிப்பதற்குப் பதிலாக மார்ச் 12 தேதி முதல் 15ஆம் தேதி வரை விசாரிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி மார்ச் 12 முதல் 15ஆம் தேதி வரை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்.. ரணகளமான பட்டரவாக்கம் ரயில் நிலையம்- 60 பேர் மீது வழக்குப்பதிவு!