சென்னை : பட்டப்பகலில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, அசோக் நகரில் ஆட்டோ டிரைவர் ரமேஷ், பாண்டுரங்கன், சதீஷ், பிரகாஷ், சுரேஷ், ரவி ஆகியோருக்கும் அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் சிவா என்பவருக்கும் ஆட்டோவை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்தனர்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வீட்டில் இருந்த சிவாகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை செய்த அசோக்நகர் போலீசார் ரமேஷ், பாண்டுரங்கன், பிரகாஷ், சுரேஷ், மாரியம்மாள், சித்ரா, தனசேகர், டில்லிபாபு, ரவி, சதீஷ், சிவா உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிவா என்பவர் இறந்து விட்டதால், அவர் பெயர் நீக்கப்பட்டது. அதேபோல தலைமறைவான தனசேகர் என்பவர் மீதான வழக்கும் தனியாக பிரிக்கப்பட்டது. மீதமுள்ள 9 பேர் மீதான வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க : கோவை அருகே தென்னை மரத்தில் மோதி நிலைகுலைந்த கார்.. தாய், மகன் பலியான சோகம்..!
இந்த தீர்ப்பை எதிர்த்து காவல்துறையும், கொலை செய்யப்பட்ட சிவாவின் உறவினர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொலையை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்கு மூலங்களும், பிற சாட்சிகளின் வாக்கு மூலங்களுடன் ஒப்பிட்டு, குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டாலும், அதை அமர்வு நீதிமன்றம் கவனிக்க தவறி விட்டது என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொலையை பார்த்த சாட்சிகள் இருந்தும், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்கள் பறிமுதல் செய்யவில்லை. வெட்டுப்பட்ட சிவாவுக்குரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ரத்தக்கறை படிந்த ஆடைகளை பறிமுதல் செய்யவில்லை என்பதற்காக அனைவரையும் விடுதலை செய்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை சாட்சிகள், சாட்சி ஆவணங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளது. அதனால், ரமேஷ், பாண்டுரங்கன், சதீஷ், பிரகாஷ், சுரேஷ், ரவி, டில்லிபாபு ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், ரூ.3,500 அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.