சென்னை: குற்றம் கடிதல், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு எதிராக திரைப்பட பைனான்சியர் ககன் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், "கடந்த 2016 ஆம் ஆண்டில் தன்னிடம் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் 2.6 கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு கடன் தொகைக்காக தயாரிப்பாளர் சதீஷ்குமார் வழங்கிய காசோலையை வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக தெரிவித்திருந்தார். எனவே, தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாரை காசோலை மோசடி வழக்கில் உரிய தண்டனை வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு ஜார்ஜ் டவுண் நான்காவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என்.சந்திர பிரபா முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், தயாரிப்பாளர் சதீஷ்குமார் 35 லட்சம் ரூபாயை இழப்பீடாக ககன் போத்ராவுக்கு ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்றும், தவறினால் மேலும் ஒரு மாத காலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதுமட்டுமல்லாது, கடன் தொகையை 2016ஆம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதையும் படிங்க: நீதிமன்றத்திற்கே கல்தா.. போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோடி செய்த தந்தை, மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை!