சென்னை: தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த கார் பந்தயமானது ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மொத்தம் ஐந்து சுற்றுகளாக நடக்கவுள்ள இந்த கார் பந்தயத்தின் முதல் சுற்று, ஸ்ரீ பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடைபெற்று முடிந்தது.
இரண்டாவது சுற்று சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. மூன்றாவது சுற்று செப்டம்பர் 13 முதல் 15 வரை கோயம்புத்தூரிலும், நான்காவது சுற்று கோவாவிலும், ஐந்தாவது சுற்று கொல்கத்தாவிலும் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது. நடைபெறும் 5 சுற்றுக்களில் 3 சுற்றுகள் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. 1,600 சிசி அப்ரில்லா இன்ஜின் தொழில்நுட்பத்துடன் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
சென்னையில் நாளை இரவு நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயமானது தீவுத்திடலில் இருந்து தொடங்கப்பட்டு, கொடிமர சாலைக்கு வந்து கொடிமர சாலையில் இருந்து இடது புறம் திரும்பி அண்ணா சாலை நோக்கிச் செல்கிறது. பின்னர், இடது புறம் திரும்பி சுவாமி சிவானந்தா சாலையில் பயணித்து மீண்டும் இடது திரும்பி நேப்பியர் பாலம் சென்று தீவுத்திடலை அடைவது ஒரு ரவுண்டு என கணக்கிடப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் கார் பந்தயத்தில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் நான்கு பேர் பங்கெடுக்கின்றனர். ஒரு அணிக்கு 2 இந்தியர்கள், 2 வெளிநாட்டவர் என நான்கு பேர் பங்கு பெறுகின்றனர். 8 அணியில் மொத்தம் 32 பேர் போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளனர். கார் பந்தயமானது 25 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.
25 நிமிடங்களில் எந்த அணியினர் குறிப்பிட்ட நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து செல்கிறார்களோ, அதற்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது. முதல் 10 இடங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது. இதில் முதலில் வருபவர்களுக்கு 25 புள்ளிகளும், இரண்டாவது இடம் பிடிப்பவர்களுக்கு 18 புள்ளிகளும், மூன்றாவது இடம் பிடிப்பவர்களுக்கு 15 புள்ளிகளும், நான்காவது இடம் பிடிப்பவர்களுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படுகிறது.
போட்டியின் முறையே பத்தாவது இடம் வரை வருபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஐந்து சுற்றுகளின் இறுதியில் அதிக புள்ளிகள் யார் பெறுகிறார்களோ, அவர்களே ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, சாம்பியன் கோப்பையை பெறுவார்கள். பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் கார்கள் சென்னை தீவுத்திடலில் தயார் நிலையில் உள்ளன. கார்கள் 250 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய காத்துக் கொண்டிருக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஓனரே கொள்ளை நாடகம்.. தாறுமாறு ட்விஸ்ட்.. திருமுல்லைவாயல் நகைக்கடை விவகாரத்தில் பகீர்!