சென்னை: டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்குப் பின் டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் உட்பட ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக ஜாபர் சாதிக் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக்குடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள், முறைகேடாக ஈட்டிய வருமானம் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் மூன்று நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி, அவர் அளித்துள்ள வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனாவிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தினை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது சொத்துக்கள், வங்கி பரிவர்த்தனைகள், அவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சலீம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். அவரிடம் ஜாபர் சாதிக் மேற்கொள்ளும் அனைத்து தொழில்கள் பற்றியும், வெளிநாடுகளில் மேற்கொண்ட வங்கி பரிவர்த்தனைகள் அது தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: “சவுக்கு சங்கருக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா?” - தேனி போலீசாரிடம் சவுக்கு சங்கர் அளித்த பதில்? - Savukku Shankar