சென்னை: மும்பை மாடலிங் படத்தை இன்ஸ்டாவில் வைத்து பல பெண்களிடம் ஆபாச வீடியோக்களைப் பெற்று மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் மற்றும் பெற்றோர் முன்னெச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளின் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவர் ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வருவதாக ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், சென்னை போரூர் பகுதியில் எலக்ட்ரிக் நிறுவனம் நடத்தி வரும் ஆனந்த் பாபு என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, ஏழுகிணறு போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியோடு விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், ஆனந்த் பாபு கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் மும்பை மாடலிங் (ஆணழகன்) ஒருவர் படத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்துள்ளது. அவர், தனது போலி இன்ஸ்டா ஐடியில் மும்பை ஆணழகன் புகைப்படங்களை வைத்துக் கொண்டு பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், பணம் பறிக்கும் செயலில் ஈடுபடவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகும் இளம்பெண்கள், குறைந்தபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், பணத்தை மட்டுமல்ல வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக இதுபோன்ற மோசடி நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இளம்பெண்கள் மற்றும் பெற்றோர் தீவிர முன்னெச்சரிக்கை உணர்வோடு இருப்பது அவசியம் என சைபர் கிரைம் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், மடிப்பாக்கத்தில் பெண்களை ஏமாற்றி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுடன் கூட்டாளியான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
மடிப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அப்பகுதியை போலீசார் கண்காணித்துள்ளனர். அதில் இளம் பெண்களை சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயல்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நேற்றைய முன்தினம் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்து, அங்கிருந்த ஐந்து பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னையில் வேலை தேடும் பெண்கள் மற்றும் வேலைக்காக சென்னைக்கு வர விரும்பும் பெண்களிடம், பல்வேறு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரிய வந்துள்ளது.
இதில், அவர்கள் இருவருக்கும் உறுதுணையாக மற்றொரு நபரும் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “முதலமைச்சரை ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது”.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கருத்து! - Savukku Shankar Goondas Act