சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (36). சொந்த ஊர் செல்வதற்காக நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த இவர், அங்கிருந்த பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது இவரது செல்போனை அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது செல்போனை காணவில்லை. இதனால் பதறிப்போன ரங்கராஜன், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் விசாரணையைத் தொடங்கினர்.
பின்னர் கோயம்பேட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அதனடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர் திருவள்ளூர் மாவட்டம் பூண்டியைச் சேர்ந்த சுமன் (39) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரங்கராஜனின் செல்போன் உட்பட மொத்தம் 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிடும் சுமன், சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் நபர்களைக் குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சுமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.
பெண் காவலர் தற்கொலை முயற்சி: அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ(35). இவர் நேற்று காலை 7 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்த நிலையில், திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த மெரினா மீட்பு படையினர், பெண் காவலரை மீட்டு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பெண் காவலர் ஜெயஸ்ரீ நலமாக உள்ளார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினை மற்றும் உடல் நல கோளாறு காரணமாகவும் பெண் காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேலூரில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துடன், பெண் காவலரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறினர்.
பள்ளி மாணவன் உயிரிழப்பு: சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் குமரவேல்- பிரியா தம்பதியினர். இவர்களது மூத்த மகன் 16 வயதுடைய சுகனேஷ்வர், சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு சுகனேஷ்வர் தனது நண்பர்களை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். சுகனேஷ்வர் வடபழனி மெட்ரோ மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த சுகுனேஷ்வரை, பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் சுக்னேஷ்வர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிய வந்தது. இது தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே கார் - சரக்கு வேன் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி!