சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு சூளைமேட்டைச் சேர்ந்த சஞ்சய், ரமேஷ், அப்பு மற்றும் ரூபேஷ் ஆகியோர், அதே பகுதியைச் சேர்ந்த சத்ய ஸ்வரூபன் என்பவரை கடுமையாகத் தாக்கியதில், அவரது இடது கண்பார்வை முற்றிலுமாக பறிபோனது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த சூளைமேடு காவல்துறையினர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் 11 சாட்சிகள் சேர்க்கப்பட்டு சாட்சியம் அளித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆஜராகி வாதம் செய்தார். இதனையடுத்து நீதிபதி, கொலை முயற்சியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் சஞ்சய்க்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தைச் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேநேரம், ரமேஷ், அப்பு ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதி, காயங்களை ஏற்படுத்தியதாக ரூபேஷுக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கண் பார்வை இழந்த சத்ய ஸ்வரூபனுக்கு அபராதத்தொகை 1 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மெத்தபெட்டமைன் பதுக்கல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது! - Methamphetamine Drug