சென்னை: சென்னையில் உள்ள அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர் பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை கிளப்பிய சம்பவம் குறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவையின் மாநில தலைவர் பா.ஆரோக்கியதாஸ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மூட சித்தாந்தகர் மகாவிஷ்ணுவை அழைத்து சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேனிலைப்பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்திய சம்பவம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், குழு விசாரணையை தொடங்கும் முன்னரே அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியரையும், சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியரையும் பணிஇட மாறுதல் செய்திருப்பது விதிகளுக்கு முரணானதாகும். ஆகவே, மூட சித்தாந்தர் மகா விஷ்ணுவை அழைத்து பள்ளியில் நிகழ்ச்சி நடத்திய சம்பவத்தில் சென்னை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அப்பள்ளிகளின் SMC நிர்வாகிகளின் தலையீடு இல்லாமல் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
மேலும், பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த குழு அமைத்திருக்கும்போது, பேற்குறிப்பிட்ட இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அவசரம் அவசரமாக பணியிட மாறுதல் செய்திருப்பது விதிகளுக்கு முரணானது.
இந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எந்த முகாந்திரமும் இதுவரை தெரியவில்லை. ஆகவே, சென்னை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அப்பள்ளிகளின் SMC நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் முழு விசாரணைக்கு பிறகே எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுப்பது சரியாக இருக்கும்.
ஆகையால் விசாரணை முடியும் வரை 2 பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவை பள்ளிக்கல்வித்துறை உடனே திரும்பி பெற வேண்டும்.மேலும், தலைமை ஆசிரியர்கள் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகுவது போன்ற தலைப்புகளில் வழி காட்டவே மகாவிஷ்ணுவை அழைத்துள்ளார்கள்.
ஆனால், மூட சித்தாந்தகர் மகா விஷ்ணு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவ மாணவிகளிடம் மூட சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்துள்ளார். இதனை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்த்தும் கண்டித்தும் பேசியதும் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு கண்ணை மூடிக்கொண்டு தமிழ அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இனியாவது தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மாதிரி பள்ளிகள், பி.எம் ஸ்ரீ திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்." என தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை வலியுறுத்துகிறது.
விசாரணை அறிக்கை ரெடி: இதனிடையே, மகாவிஷ்ணு ஆன்மீக சர்ச்சையை தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தனது விசாரணை அறிக்கையை நாளை (செப்.9) பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதியிடம் அறிக்கை அளிக்கிறார்.
இந்த அறிக்கையில் இயக்குநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் துறைரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிகல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நல்லாசிரியர் விருது பரிசுத்தொகையை பழங்குடியின பெண் குழந்தைகள் நலனுக்காக கொடுத்த கோபிநாத்!