சென்னை: இந்திய விண்வெளி தினமான இன்று (ஆகஸ்ட் 23), சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமையில் 'இந்தியாவின் இளம் விஞ்ஞானி போட்டி’ (Annual Young Scientist India Competition 2024) நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஷ்ய விண்வெளி வீரர் செர்கெய் கோர்ஸாக்கோவ், கஜகஸ்தான் விண்வெளி வீரர் ஐடென் ஐம்பெடோவ், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டொடர்னோ மற்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இளம் விஞ்ஞானி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. விண்வெளி வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நேரடி உரையாடல்கள் நடந்தது. மேலும், அதில் விண்வெளி வீரர்கள் தங்களின் விண்வெளி அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த விழா குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா தலைமை நிர்வாகி ஸ்ரீமதி கேசன் பேசுகையில், "பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விண்வெளி பற்றிய தகவல்கள் மற்றும் ஆர்வம் வருவதற்கான முயற்சிகளை நாங்கள் செய்கிறோம். அதன் ஒரு பகுதிதான் இந்த நிகழ்வு. பூமியை ஆய்வு செய்வதற்கு நாம் விண்வெளிக்குச் செல்ல வேண்டும். இந்த விண்வெளி ஆராய்ச்சி குறித்து மாணவர்களுக்கு பற்று ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விழாவில் விண்வெளி வீரர்களை அழைத்து வந்துள்ளோம்.
27 விண்வெளி ஆராய்ச்சி விசயங்கள், 5 ஆர்பிட்டல் சாட்டிலைட், சாட்டிலைட் டிப்ளோயர் என்பது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் உபயோகப்படுத்துவதை தான் நாம் பின்பற்றுகிறோம். ஆனால், நாங்கள் 1:10 என்ற விகிதத்தில் அதைவிட குறைந்த எடையான 350 கிராமில் சாட்டிலைட் டிப்ளோயர் செய்து உலக சாதனை படைத்துள்ளோம்.
இந்தs சாதனையை கூடிய விரைவில் உலகத்திற்கு வணிகமயப்படுத்தப் போகிறோம். குறிப்பாக, இந்தியாவில் சாட்டிலைட் செபேரேட்டின் பெரிய அளவில் செய்ய இருக்கிறோம். இது ஒரு புறம் இருந்தாலும், நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று தான் நாங்கள் யோசித்துல் கொண்டு இருக்கிறோம்.
இங்கே இருந்து சென்று நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிகளை பார்ப்பதற்கு பதிலாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். விண்வெளி சம்பந்தமாக அனைத்து வசதிகளும், மாணவர்களுக்கு சொல்லித் தருவதற்கு தேவையான கல்வி வசதிகளையும் முதலமைச்சர் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.
பின்னர் பேசிய விண்வெளி வீரர் செர்கெய் கோர்ஸாக்கோவ், "இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். நாம் தற்போது இந்திய விண்வெளி தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம், இந்தியா மென்மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்த நாள் அந்த நொடி.. உலகமே உற்றுநோக்கிய சந்திரயான் 3.. தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருள் என்ன?