சென்னை: திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். மனைவி குழந்தைகளை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, தீவுத்திடல் பகுதியில் நிறுத்தியிருந்த தனது வாகனத்தை நிறுத்தச் சென்ற கார்திகேயன் திரும்பவில்லை. குழந்தையுடன் நின்றிருந்த சிவரஞ்சனி பதறிய நிலையில், கார்த்திகேயனின் தொலைபேசிக்கு பலமுறை முயன்றதாகக் கூறுகிறார்.
அவரது தொலைபேசியை எடுத்த யாரோ ஒருவர், கார்த்திகேயன் வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்து கிடப்பதாகக் கூறுகிறார். பதற்றமடைந்த சிவரஞ்சனி குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார். ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்ற போதும் கார்த்திகேயனை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கார்த்திகேயனுடன் சேர்த்து 5 உயிர்கள் நேற்று மெரினா வான் சாகசத்தை பார்க்க வந்த இடத்தில் பறிபோயிருக்கின்றன.
கார்த்திகேயனின் ஒற்றை வருமானத்தை நம்பி இருக்கும் தனது குடும்பம் தலைவனை இழந்து தவிப்பதாக பரிதவிப்புடன் கூறுகிறார் சிவரஞ்சனி. வானிலை ஆய்வு மைய தகவல்களின் அடிப்படையில் ஏர் ஷோ நடைபெற்ற அக்டோபர் 6ம் தேதியன்று சென்னை மெரினாவில் நண்பகல் வேளையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் தகித்தது.
பொதுவாகவே ஈரப்பதம் மிக்க கடற்கரை போன்ற பகுதிகளில் இருக்கும் போது, காற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக இந்த வெப்பநிலையை அதிகமாக உணர நேரிடும் என்கிறது பூவுலகின் நண்பர்கள் குழு. Wet bulb Temperature எனும் தத்துவப்படி இது 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை உணரப்பட்டிருக்கலாம் என அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.
இத்தகைய கடுமையான சூழலுக்கு நடுவே தான் அக்டோபர் 5ம் தேதி ஐதராபாத்திலிருந்து புறப்பட்ட நாங்கள், நள்ளிரவில் சென்னை சென்று அடைந்தோம். 6ம் தேதி அதிகாலையில் மெரினாவுக்கு அருகாமையிலிருந்த எங்களின் தங்கும் விடுதியிலிருந்து, மெரினா கடற்கரையை நோக்கி நடந்து சென்றேன். அந்த அதிகாலையில் போக்குவரத்து போலீசார் வெள்ளை சீருடையுடன் கடற்கரை காமராஜர் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்தனர்.
அங்கிருந்து கடற்கரை சர்வீஸ் சாலையில் தடுப்புகளை அமைத்து சிறுவியாபாரிகளின் வாகனங்கள் அதற்கு மேல் கடந்து செல்லாதபடி தடுக்கப்பட்டனர். அங்கு இளநீர்க்கடை அமைத்திருந்த ராஜேஷ்குமார் என்பவரிடம் பேசிய போது, "6 மணிக்கு முன்னாலே வந்தவர்களை உள்ளே அனுமதித்து விட்டார்கள். அன்றாடம் விற்பனையை நம்பி தான் எங்கள் பிழைப்பு நடக்கிறது என்றார்" ராஜேஷ் தன்னுடைய 3 சக்கர சைக்கிள் நிறைய இளநீர்குலைகளுடன் மெரினாவுக்குள் இடம் பிடித்திருந்தார்.
இதனைத்தவிர மெரினாவில் வழக்கம் போல காலைநேரமாக இருந்தது. விறுவிறுப்பாக பொதுமக்கள் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். மெரினா கடற்கரையில் பெரும் கூட்டமாக கூடும் புறாக்களுக்கு சிலர் உணவளித்துக் கொண்டிருந்தனர். விமானப்படை அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் அமர்ந்து பார்க்கும் இடம் மார்க் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. பாராசூட்கள் , ஹெலிகாப்டர்களிலிருந்து வீரர்கள் இறங்குவதற்கான இடமும் பாதுகாக்கப்பட்டிருந்தது.
இவற்றை பார்த்துவிட்டு எனது அறைக்கு திரும்பினேன். எங்கள் அறையிலிருந்து செக் அவுட் செய்துவிட்டு, காலை உணவுக்காக சென்னையின் பிரபலமான ரத்னா கஃபேவுக்கு காரில் சென்றோம். வழக்கமாகவே கூட்டம் இருப்பது இயல்புதான் என்றாலும், சற்று அதிகமாகவே நிரம்பி வழிந்தது. அங்கு சப்ளையர்களிடம் விசாரித்த போது, வழக்கத்தைவிட அதிகமாக நிரம்பிய கூட்டத்தை தாங்களே எதிர்பார்க்கவில்லை என கூறினார். சுமார் 30 நிமிட காத்திருப்புக்குப் பின்னர் எங்களுக்கு இடம் கிடைத்தது. உடன் வந்த நண்பர்களுக்கு சென்னையின் இட்லி சாம்பாரை சுவைக்கச் செய்த பின்னர், கடற்கரையை நோக்கி புறப்பட்டோம்.
ஏற்கெனவே கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் கடற்கரையை நோக்கி நடந்தே செல்வதென முடிவெடுத்தோம். நிரம்பி வழிந்த வாகனங்களுக்கு நடுவே, ஒருவழியாக கடற்கரையை சென்றடைந்தோம். கண்ணகி சிலை வழியே கடற்கரை மணலை தொட்ட போது நேரம் காலை 10.30 மணி. எங்களுடன் வந்த நண்பர்கள் கடலை பார்க்க ஆசைப்படவே நான் கடற்கரையை ஒட்டி குழுமியிருந்த பொதுமக்களிடம் பேசியவாறே அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தேன்.
3வயதான நக்ஷத்ரா எனும் சிறுவன் தனது தாயுடன் கையில் மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு கடற்கரைக்கு வந்திருந்தார். எனது மகன் பைலட் ஆக ஆசைப்படுகிறான், எனவே இன்றைய ஏர் ஷோ வை அனுக்கு காண்பிக்க அழைத்து வந்தேன் என்றார் அவனது அம்மா.
இதே போன்று 6ம் வகுப்பு படிக்கும் இவனேஷ் என்ற சிறுவன் தொலைக்காட்சியில் ஒத்திகையைப் பார்த்ததால், விமான சாகசம் பார்க்க வேண்டும் என்ற ஆசை தனக்கு வந்ததாகவும், நேரில் பார்க்க மாமாவுடன் வந்திருப்பதாகக் கூறினான்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏர் ஷோ தொடங்கியது முதன் முதலாக கூட்டத்தை நோக்கி பறந்து வந்த ஹலிகாப்டரை பார்த்ததும் களைப்பை மறந்து கூச்சலிடத் தொடங்கினர் பொதுமக்கள். எங்களுடன் வந்திருந்த பத்திரிகையாளர் விகாஸ் கவுசிக், கடற்கரையை நோக்கிச் சென்றிருந்தார், " கடல் நீரை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என விரும்பியதால் நான் சென்றேன். வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே என்னால் குடிநீருக்கான ஏற்பாடுகள் எதையும் பார்க்க முடியவில்லை. கடற்கரையிலிருந்த சிறு வணிகரிடம் தண்ணீர் மற்றும் லெமன் சோடா வாங்கிக் குடித்தேன்" என்றார். இதற்கு மேலும் இந்த கடுமையான வெப்பத்தில் இருப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததால் வான் சாகச நிகழ்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெளியேறத் தொடங்கினோம் என்கிறார் விகாஸ் கவுசிக்.
இதையும் படிங்க: மெரினா மரணங்களுக்கு இதுதான் காரணமா? அது என்ன வெட் பல்ப் டெம்பரேச்சர்?
மற்றொரு சக பத்திரிகையாளரான மயூரிகா பேசுகையில் கண்ணகி சிலை அருகில் இருந்த ஒரு மரத்தினடியில் ஏராளமான மக்கள் வெயிலுக்கு பயந்து தஞ்சமடைந்திருந்தனர். அவர்களுடன் நானும் அமர்ந்திருந்தேன். அருகில் இருந்த பூங்கா போன்ற பகுதியிலும் நிழல் இருந்தது ஆனால் அங்கு பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை என்கிறார். மரத்தினடியில் நிழலாக இடம் கிடைத்த நிலையில் அங்கேயே படுத்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டதால் தெம்பாக உணர்ந்தேன் என்கிறார் மயூரிகா.
கடற்கரையை விட்டு வெளியேறி காமராஜர் சாலையை கடக்க முயன்ற போது மக்கள் அலை அலையாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை கடந்து செல்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்ததால் சப்வேயை பயன்படுத்தி சாலையை கடந்தோம். அந்த நேரத்தில் சுரங்க நடைபாதையில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.
ஆனால் இதன் பிறகு தான் சவாலானதாக இருந்தது பெரும் கூட்டம் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், அவர்களை எதிர்த்து நடை போட்டு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து எங்களின் வாகனத்தை அடையவேண்டியதாக இருந்தது. இதற்கிடையே வாகனங்கள் பெரும் எண்ணிக்கையில் வரிசையாக நின்றன. ஐஸ் ஹவுஸ் முதல் ராயப்பேட்டை வரை வாகன நெரிசல் சற்று கூட குறையவில்லை. அனைவரும் மெரினா நோக்கி செல்வதிலேயே குறியாக இருந்ததால் ஒருவழியாக சமாளித்து வெளியேறினோம். சுமார் 1 மணியளவில் ராயப்பேட்டையை கடந்து ஆயிரம் விளக்கு பகுதிக்கு வந்த பின்னர் தான் போக்குவரத்து நெரிசல் குறைந்திருந்தது.
மாலை நேரத்தில் பொதுமக்கள் மயங்கி விழுந்தது , உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வரத் தொடங்கின. விவேகானந்தர் இல்லம் அருகே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஈடிவி பாரத் செய்தியாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ஏராளமான மக்கள் மயங்கி விழுந்த நிலையில் விமானப்படை மற்றும் சென்னை கார்ப்பரேஷன் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர் என்கிறார். விஐபி வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பாதை, ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை சென்றடைய உதவியாக இருந்தன எனவும் ரவி குறிப்பிடுகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நெரிசல் காரணமாக யாருமே உயிரிழக்கவில்லை என கூறனார். மரணங்கள் வருத்தமளிக்கிறது என்றாலும், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அளித்த தகவல்களின்படி 15 லட்சம் மக்கள் இந்த விமான சாகசத்தை கண்டு களித்திருக்கும் நிலையில், இவர்களுக்கு தேவையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் அரசு நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதும் பெரும்பாலானோரின் மனக்குறையாக இருந்தது.
இதையும் படிங்க: விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!