விழுப்புரம்: விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி துவங்கப்பட்டு 40 ஆண்டு காலம் ஆகிய நிலையில் இந்த கல்லூரியில் படித்த சந்திரயான் மூன்று திட்ட இயக்குனர் வீரமுத்துவேலை கௌரவிக்கும் விழா மற்றும் 41 ஆம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூன்.15) கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்திரயான் மூன்று திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தான் பயின்ற ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு வந்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் பேசிய அவர், "எனக்கு பயிற்றுவித்த மனோகரன், சௌந்தர்ராஜன் உள்ளிட்ட ஆசிரியர்களை என்னால் மறக்க முடியாது.
ஏழுமலை பாலிடெக்னிக் சேர்மன் முழு உரிமையை எங்களுக்கு அளித்தனர். மாணவர்கள் என்ன படிக்கிறோம், எதை நோக்கி செல்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். என்னுடைய ஆசிரியர்களால் தான் விண்வெளி துறையில் எனக்கு ஈடுபாடு வந்தது. இந்த கல்லூரி தான் நான் ஒரு உயர்ந்த மனிதனாக எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.
என்னைப் போன்று சாதித்தவர்கள் நிறைய நபர்கள் இந்த கல்லூரியில் உள்ளனர். நான் சாதித்தது ஒன்றுமில்லை. நான் சாதித்தது எனக்கு பெரிதாக இதுவரை தெரியவில்லை. என்னை விட சாதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த கல்லூரியை எடுத்து நடத்திய தாளாளர் சாமிக்கண்ணு ஒரு சாதனையாளர். 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் அனுப்பி வைத்து சாதனை படைத்தோம்.
ஆனால் சந்திரயான் மூன்று திட்டத்திற்கு பின்பு தான் நான் பிரபலமாக பார்க்கப்பட்டேன். மாணவர்கள் எதை செய்தாலும் முழு முயற்சியுடன் முழு ஈடுபாடுடன் 100 சதவீத ஈடுபாடுடன் செயல்படுத்த வேண்டும். நீங்கள் விழுப்புரத்தில் இருந்து உயர் மட்ட படிப்பிற்காக சென்னை கல்லூரிக்கு செல்லும் பொழுது படிப்பை புரிந்து படிக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு அதன் மீதான நம்பிக்கை வரும்.
நான் படிக்கும் பொழுது அனைத்து தரப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி புத்தகப் பாடம் மட்டுமின்றி அனுபவப் பாடத்தையும் நிறைய பேரிடம் பயின்றேன். நாங்கள் படிக்கின்ற காலத்தில் தொலைபேசி இல்லை ஆனால் தற்போதைய தொழில்நுட்பக் காலத்தில் தொழில்நுட்பம் மிக வளர்ந்து உள்ள சூழலில் நிறைய தகவல்களை பெற வாய்ப்புகள் அதிகம். அதனை நல்ல முறையில் மாணவர்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கணிதம் மிக முக்கியம். கணிதத்தில் எனக்கு திறமை உள்ளது என்பதை வெளிப்படுத்தியவரே எனக்கு பயிற்றுவித்த மனோகர் ஆசிரியர் தான். கணிதம் மிக முக்கியம் கணிதத்தில் சிறு தவறு செய்தாலும் நிலவுக்கு செல்ல முடியாது. சந்திரயான் மூன்று திட்டத்தை வெற்றியடைய செய்ய நான் படித்த பொறியியல் படிப்பு பயனளித்தது.
எந்த துறையாக இருந்தாலும் உங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்திரயான் மூன்று திட்டத்தில் நான் மட்டும் சாதிக்கவில்லை, என்னுடன் பல நபர்கள் ஒன்றிணைந்து இந்த சாதனைகளை படைத்துள்ளோம். அதற்கு கூட்டு முயற்சி மிக முக்கியம். தனித் திறமையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்பொழுது படிக்கின்ற மாணவர்களும், படித்து ஒரு சிறந்த இடத்திற்கு வர வேண்டும். இங்கு படிக்கின்ற மாணவர்கள் எனது அலுவலகத்திற்கு வந்து அறிவியல் மையங்கள் மற்றும் அறிவியல் செயல்பாட்டினை பார்வையிடலாம். அனைவருக்கும் எனது அலுவலகத்தில் அனுமதி உண்டு" என்று தெரிவித்தார்.