சென்னை: மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த மாதம் 11ஆம் தேதி சென்னையில் இருந்து இலங்கைக்கு இரண்டு நபர்கள் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதைதொடர்ந்து இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தியதில், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சென்னையில் உள்ள கிருஷ்ணகுமாரி மற்றும் முகமது ரிசாலுதீன் ஆகிய மூவரும் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரி மற்றும் முகமது ரிசாலுதீன் உட்பட மூவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் 1.47 கிலோ கிராம் மெத்தாம்பேட்டமைன் என்கிற போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு (டிஆர்ஐ) மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஒன்றில் காசிலிங்கம் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்ததும், இதையடுத்து காசிலிங்கம் சிறையில் இருந்தபடியே அவரது மனைவி கிருஷ்ணகுமாரி மூலம் கடத்தலை ஒருங்கிணைத்து போதைப் பொருள்களை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடமும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற கார் ஒன்றை மடக்கி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது காரில் இருந்த மூன்று நபர்களிடமிருந்து சுமார் 2.7 கிலோ கிராம் மெத்தாம்பேட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - tirupathur Collector Office