கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது கொட்டாரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் காலணி மற்றும் லெட்சுபுரம் காலணி பகுதியில், சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆதிதிராவிட சமுதாயக் குடும்பங்கள் அதிகளவில் உள்ளனர்.
மழைக் காலங்களில் மூழ்கும் மயானம்: இவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தும் சுடுகாடானது ஊர் அருகே குளத்தை ஒட்டியவாறு அமைந்துள்ளது. சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் தேங்காமல் காணப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளாலும், அருகில் உள்ள நிலங்கள் உயர்த்தப்பட்டதாலும் சிறு மழை பெய்தாலும் குளம் போல் மாறிவிடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பேரூராட்சி கண்டுகொள்வதில்லை? இதனை சரிசெய்ய பலமுறை இந்த ஊர் மக்கள் எம்எல்ஏ மற்றும் எம்பிக்களிடம் கோரிக்கை வைத்து நிதி பெற்றாலும், அதனை பேரூராட்சி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்தாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவதாகக் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் சுடுகாட்டில் வெள்ளம் சூழ்ந்தது.
அப்போது இறந்தவர் உடலை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஜேசிபி மூலம் நிலத்தினை தோண்டி தண்ணீரை வெளியேற்றி, பின்னர் உடலை புதைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட ஆட்சியருக்கு சுடுகாட்டினை சீரமைக்க மனு வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.1.75 லட்சம் வாங்கியும் தரமற்ற உணவு? TNMA மாணவர்கள் சாலை மறியல்!
மாவட்ட ஆட்சியர் கோரிக்கையை ஏற்று சுடுகாட்டில் மணல் நிரப்பி சீரமைக்க வேண்டும் என இம்மாதம் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார். ஆனால் கொட்டாரம் பேரூராட்சியில் நடந்த இரண்டு கூட்டத்திலும் சுடுகாட்டினை சீரமைக்க முன்வராமல், “மயானம் அமைந்துள்ள பகுதியில் மண் நிரப்ப பொதுப்பணித்துறையின் அனுமதி பெற வேண்டும்" என பல்வேறு காரணங்களைக் கூறி, அதனை தட்டிக் கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது குறித்து கொட்டாரம் பேரூராட்சி நிர்வாகத்தில் விசாரித்த போது, “சம்பந்தப்பட்ட மயானம் அமைந்து உள்ள பகுதி பொதுப்பணித்துறையின் கீழ் வருவதாகவும், அவர்கள் அனுமதி கொடுத்தால் உடனடியாக சீரமைக்கப்படும்" எனவும் கூறினர்.
மயானம் சீரமைக்கப்பட வேண்டும்: அதேநேரம் இது குறித்து லெட்சுபுரம் காலணியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “மயானத்தை சீரமைக்க அனைத்து விதமான வழிகள் இருந்தும், பேரூராட்சித் தலைவர் சாதியை மையப்படுத்தி எங்களைப் புறக்கணித்து வருகின்றார். மேலும், தங்கள் வார்டுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை.
ஆனால் அருகாமையில் இருக்கும் வார்ட்டுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறார். நாங்கள் அவருக்கு ஓட்டு போடவில்லை என்ற எண்ணத்தில் இந்த மாதிரி செய்து வருகிறார் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையீட்டு உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.