வேலூர்: வேலூர் மாவட்டம், தினகரன் பேருந்து நிலையம் அருகே கவியரசன் என்பவருக்குச் சொந்தமாக கணேஷ் மொபைல் சர்வீஸ் மற்றும் செல்போன் விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அக்கடையில் ரேணுகா என்ற பெண் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், அப்பெண்ணிடம் ஒரு நபர் தனது செல்போனில் டச் ஸ்கிரீன் உடைந்து விட்டதாகவும், அதனைச் சீரமைக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த பெண் கடை உரிமையாளர் கவியரசை செல்போனில் தொடர்பு கொண்டு விலையை விசாரித்துள்ளார். பின்னர் செல்போனை சரி செய்ய ரூ.1700 ஆகும் எனத் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், கம்பெனியை விட இங்கு குறைவாகத்தான் உள்ளது. எனவே, தனக்கு உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதற்குக் கவியரசு உடனடியாக தர முடியாது எனவும், சரி செய்யச் சிறிது தாமதமாகும் என கூறியதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அந்த நபர் கடையின் விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டு மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால், சென்ற சில மணி நேரத்துக்குள் திரும்பி வந்த அந்த நபர், தனது வாகனம் பழுதாகிவிட்டதாகவும், அதனை உடனடியாக புகைப்படம் எடுத்து வாகனம் பழுது பார்க்கும் நபருக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஆனால், தனது செல்போனின் கேமரா உடைந்துள்ளதாகவும் கூறி, கடையில் பணி புரியும் பெண்ணின் செல்போனையும், பாஸ்வேர்டையும் (password) வாங்கிச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த நபர், தான் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும், தனது அண்ணன் மருத்துவராக உள்ளதாகவும், 5 நிமிடத்திற்குள் திரும்பி வந்து செல்போனைத் தருவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செல்போனை வாங்கிச் சென்ற நபர் நீண்ட நேரமாகியும் வராததால், அப்பெண் செல்போனை தொடர்பு கொண்டு பார்த்தபோது, போன் ஸ்சுவிட் ஆஃப் என வந்துள்ளது. அப்போதுதான், வாடிக்கையாளர் போல் டிப்டாப்பாக உடை அணிந்து வந்த நபர் செல்போனைத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், அந்த நபர் தொடர்பாக வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது, அந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சியை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜி-ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை...