சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் கருப்பூர் அருகில் உள்ளது மேட்டுப்பதி. இந்த பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தலையில் முக்காடிட்டபடி முகத்தையும் மூடிக்கொண்டு கையில் பட்டாக்கத்திகளுடன் மூன்று கொள்ளையர்கள் தெருவில் வலம் வந்துள்ளனர். மேலும் அந்த தெருவில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளையும் தட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.
செல்லும் வழியில் மற்றொரு வீட்டின் உள்ளே நுழைந்த அந்த கும்பல், கணவன் மனைவியை மிரட்டி மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துள்ளனர். அப்போது அந்தப் பெண் இது தங்க நகை இல்லை கவரிங் என்று கூறியதால், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு, கணவரையும் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் விசாரணைக்கு மேட்டுப்பதி பகுதிக்கு வந்த கருப்பூர் போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அதனைத் தொடர்ந்து வேறு எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அடிக்கடி இதே போல கருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் அட்டகாசத்தில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், அந்த மூன்று கொள்ளையர்களும் மேட்டுப்பதி பகுதியில் இரவில் முகத்தை மூடியபடி பட்டாக்கத்தியுடன் வலம் வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தோட்டத்தில் பழம் பறித்த பழங்குடியின வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட நபர்! - Tribal youth shot