கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட சிபிசிஐடி தனிப்படை போலீசார், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நொய்யல் வேட்டமங்கலம் அருகே உள்ள கவுண்டம்புதூர் ஈஸ்வரமூர்த்தி வீடு, புகலூர் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி அதிமுக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் செல்வராஜ் வீடு மற்றும் கொடையூர் அருகே உள்ள மணல்மேடு பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ் வீடு ஆகிய மூன்று இடங்களில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையை காலை 8 மணியளவில் துவக்கிய சிபிசிஐடி அதிகாரிகள், முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், வங்கிக் கணக்குகள் மூலம் பெருந்தொகை கைமாறியது குறித்து வங்கி மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில், இதில் தொடர்புடையவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் ஏலச்சீட்டு மோசடி? கரூரில் பைனான்சியர் கைது!