திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த மே மாதம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரபல தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், ஜெயக்குமார் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கேள்விகள் எழுந்தன.
கடிதத்தில் அரசியல் புள்ளிகள்: அதே சமயம் ஜெயக்குமார் எழுதியதாக அடுத்தடுத்து வெளியான கடிதங்களில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, நாங்குநேரி எம்எல்ஏ மனோகரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தராஜ் உட்பட பலரது பெயர்களை குறிப்பிட்டு அவர்களால் தனக்கு பண பிரச்சினை இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, பணம் கொடுக்கல், வாங்கலில் கொல்லப்பட்டாரா எனவும் போலீசார் சந்தேகித்தனர்.
மேலும், நெல்லை மாவட்ட காவல்துறையினர் சுமார் பத்து தனி படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நபர்கள் அனைவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது.
சிபிசிஐடி: மேலும், ஜெயக்குமாரின் மகன்கள், மனைவி உட்பட குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், ஜெயக்குமார் வழக்கில் துப்பு துலங்காத நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு அதிரடியாக சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நெல்லை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலகராணி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். மேலும், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் முத்தரசி உட்பட உயர் அதிகாரிகளும் நெல்லையில் முகாமிட்டு ஜெயக்குமார் வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக ஜெயக்குமார் குடும்பத்தினரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். ஆனால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தற்போது வரை ஜெயக்குமாரின் மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.
இது போன்ற நிலையில் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு மிகவும் நெருக்கமான திமுக நிர்வாகி ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் உதவியாளர்: ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரான ஜோசப் பெல்சி சபாநாயகர் அப்பாவுவின் வலதுகரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சபாநாயகர் செல்லும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஜோசப் பெல்சி கலந்து கொள்வார். மேலும், சபாநாயகரின் அனைத்து நகர்விலும் பங்கேற்க கூடியவராக ஜோசப் பெல்சி இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் ஜோசப் பெல்சியிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் விசாரித்த போது, '' ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதங்களில் இடம் பெற்றுள்ள முதல் நபரான முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்ட போது ஜெயக்குமார் எழுதிய கடிதங்களை ஜோசப் பெல்சி தான் வெளியிட்டதாக கூறியுள்ளார். அதன் பெயரில்தான் சிபிசிஐடி போலீசார் ஜோசப் பெல்சிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின் போது கடிதம் தங்களுக்கு எப்படி கிடைத்தது என சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.
அதற்கு ஜோசப் பெல்சி வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் கடிதம் வந்ததை தெரிவித்துள்ளார். மேலும், ஜோசப் பெல்சி தனது விளக்கத்தை விரிவான கடிதமாக எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜெயக்குமார் எழுதிய கடிதத்திலும் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம் பெற்று இருக்கும் சூழலில் தற்போது சபாநாயகரின் மிக நெருங்கிய ஆதரவாளரிம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருப்பதால் சபாநாயகருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் குண்டர் சட்ட வழக்கு; உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகல்!