தஞ்சாவூர்: கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த 28ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி, மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது.
இந்நிலையில், கல்லணைக்கு வந்த நீரை காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்குக் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளுக்குக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி தண்ணீரைத் திறந்துவிட்டனர்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நாகை, திருவாரூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடியும், வெண்ணாற்றில் 1000 கன அடியும், கல்லணை கால்வாயில் 500 கன அடியும், கொள்ளிடத்தில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி பாசனப் பகுதிகளில் தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தபின் உரியநீர் காரைக்கால் பாசனப் பகுதிக்குப் பங்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டாலும் திருச்சி முக்கொம்பில் தண்ணீர் திறக்காததால் தஞ்சை மாவட்டம் கல்லணையில் தண்ணீர் வராமல் ஆங்காங்கே மணல் திட்டுகளாகக் காணப்படுகின்றன என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
"கடந்த 10 மாதங்களாக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாமல் இன்று தான் கல்லணையை திறந்துள்ளனர். இருப்பினும், கல்லணைக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லை. அதிக மழை இல்லாத காரணத்தால் கல்லணையில் நீரைச் சேகரித்து வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு நீர் மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும்" எனத் தஞ்சாவூர் விவசாயி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்