கரூர்: புதிய வேளாண் கல்லூரி 2020 - 2021ஆம் கல்வியாண்டு முதல், கரூர் மாநகராட்சி பல்நோக்கு மைய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு நடைபெற்று வந்தது.
இதனிடையே, கரூர்- திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி கிராமத்தில், மத்தியபுரிஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 200 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் 60 ஏக்கரில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மத்தியபுரீஸ்வரர் கோயிலுக்கு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013-இன் கீழ் இழப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்து, தமிழக வேளாண் துறை சார்பில், ரூ. 12.38 கோடி திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டது.
ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை, அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு மார்ச் 15ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அளித்துள்ள அரசாணைக்கு ஆதரவு தெரிவித்து, கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள மணவாசி சுங்கச்சாவடி பகுதியில், காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தலைமையில், விவசாயிகள் இனிப்புகள் வழங்கி தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
இது குறித்து காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது, “கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க மணவாசி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் சேர்ந்து தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டு இரண்டு, மூன்று வருடங்கள் கல்லூரி நடைபெற்றாலும், இப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்படவில்லை.
கோயில் நிலங்களை நஷ்டப்படுத்தி எடுக்கக்கூடாது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்தது. இதனால் அனைவரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதில், கோயில் நிலங்களில், கோயிலுக்கு நஷ்டம் இல்லாமல் நல்ல முறையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியானால், வேளாண்மைக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தாமதமாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் வேளாண் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிட்டார். இது வரவேற்கத்தக்கது. மணவாசியை சேட்லைட் கரூராக கொண்டு வர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கரூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில், விரைவில் விமான நிலையம் அமைப்பதற்கு கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியில் இடத்தை தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி கரூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் போதிய இடவசதி இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கரூர்-திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள மணவாசி கிராமத்தில், கரூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'புதுச்சேரியில் வேட்பாளர்களிடம் ரூ.50 கோடி லஞ்சம் கேட்ட பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு