கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதி ஆரோக்கியசாமி வீதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் கமலேஷ். இவர் பஞ்சு ஆலைகளுக்கு தேவையான பருத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தொழில் நிமித்தமாக வெளியில் சென்ற இருந்ததாகவும், அவரது மகன் மற்றும் ஊழியர்கள் சிலர் கமலேஷின் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜன.25) பிற்பகல் கமலேஷ் வீட்டிற்கு இரு கார்களில் வந்த பத்துக்கு மேற்பட்ட கும்பல், கமலேஷின் மகன் உட்பட நான்கு பேரையும் கட்டிப்போட்டு, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் 13 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, சந்தேகம் அடைந்து கமலேஷ் வீட்டுக்கு வந்த நபர்கள் கட்டிப்போடப்பட்டு இருந்த நான்கு பேரையும் மீட்டனர்.
பின்னர், சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் சம்பவம் குறித்தும், திருடப்பட்ட நகைகள், பணம் குறித்தும் வீட்டில் இருந்த கமலேஷின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் சோதனை.. ஆயுதங்கள், மான் கொம்புகள் பறிமுதல்!
மேலும், தொழில் அதிபர் கமலேஷ் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், அப்பகுதியில் இருக்கும் மற்ற சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வீட்டின் அனைத்து பகுதியையும் அறிந்தவர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கமலேஷ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூட இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் கோவை மாநகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!