சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (வயது 30) என்பவரை இன்று அதிகாலையில், சென்னை புழல் அருகே வைத்து போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின் வெளியே வந்தவர்.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் இவர்தான் திட்டம் தீட்டி கொலையை அரங்கேற்றம் செய்ய உறுதுணையாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு திருவேங்கடத்தை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடியதையடுத்து, அவரை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடி வந்துள்ளனர்.
அப்போது மாதாவரம் பகுதியில் தனியாக ஒரு தகர கொட்டகை ஒன்று இருந்துள்ளது. அதில் ரவுடி திருவேங்கடம் பதுங்கியதை அறிந்து கொட்டகையை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் போலீசார் திருவேங்கடத்தை வெளியில் வந்து சரணடையுமாறு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கையில் வைத்திருக்கலாம் என போலீசார் எண்ணி உள்ளனர்.
இந்த நிலையில் அவர் திடீரென துப்பாக்கியை கொண்டு காவல் ஆய்வாளர் முகமது புகாரியை சுட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்கள் முகமது புகாரி மற்றும் சரவணன் இருவரும் ஒரே நேரத்தில் ரவுடி திருவேங்கடத்தை நோக்கி துப்பாக்கியில் சுட்டதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் திருவேங்கடத்தின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்பு என்கவுண்டர் சம்பந்தமாக போலீசாரிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள திருவேங்கடத்தின் மீதான வழக்குகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றும் 2015ல் திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி தென்னரசு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு கொலைகளில் திருவேங்கடம் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் இவர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் குன்றத்தூர் காவல் நிலையத்தில் 2011, 2013, 2018 ஆண்டுகளில் இவர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை வழக்கில் முக்கிய புள்ளியாக இருந்த திருவேங்கடம், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவர் தான் கொலைக்கு சதி திட்டம் தீட்டி ஒருமாத காலமாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு கொலையை அரங்கேற்றம் செய்ய உறுதுணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டர்.. சென்னைையில் அதிகாலை நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்! - CHENNAI ENCOUNTER