சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் பதாகைகள், கொடிக் கம்பம், உருவச் சிலைகள், உருவப்படங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேர்தல் பறக்கும் படை மாநிலம் முழுவதும் வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், பரிசுப் பொருட்கள் ஏதாவது எடுத்துச் செல்லப்படுகிறதா எனவும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்த் பிறந்தநாளை, ஒட்டி தையல் பயிற்சி நிபுணர்களுக்கு அளித்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி நிறைவு செய்த சுமார் 300 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்காக கட்சி அலுவலகத்தில் சாமியானா பந்தல், பேனர்கள் வைக்கப்பட்டது.
இதையடுத்து, தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள், சாமியானா பந்தல்கள் அமைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் அதிகாரி ஒருவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தை விதியை மீறப்பட்டதால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ; தேர்தல் விதிமுறைகள் மீறலா?