சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கவும், 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று போராட்டத்திற்கு அனுமதி இல்லை என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இதனால், சாம்சங் தொழிலாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், போராட்டத்தில் ஈடுபட்ட 625 தொழிலாளர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனையடுத்து, உயர் நீதிமன்றம் சாம்சங் போராட்டத்திற்கு தடை இல்லை என தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; வேலை நிறுத்தம் அறிவித்துள்ள சிஐடியு!
அதனைத் தொடர்ந்து இன்று காலை எச்சூர் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட தொழுலாளர்கள வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில், சுங்குவார்சத்திரம் மற்றும் குன்னம் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு, தொழிலாளர்களை போராட்டத்திற்கு இரண்டாவது நாளாக இன்று அனுமதி இல்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால், சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் உள்பட போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்து திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட தோழர்களை சந்திக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் 625 பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடையை மீறி குவிந்தது, அரசு உத்தரவை மீறி செயல்பட்டது (U/s 189(2), 223 BNS) ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.