திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது சகோதரர் மோகன்ராஜ் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி இரவு மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் மோகன்ராஜை வெட்டி கொலை செய்தனர்.
அதனைத் தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் சகோதரி ரத்தினாம்பாள் ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் வெங்கடேசன் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடினார்.
இதனால் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இது தவிரச் சோனை முத்தையா, செல்லமுத்து, அய்யப்பன் மற்றும் செல்வம் என்கிற வெங்கடேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப்.15) அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பினை வழங்கினார். இதில் முதல் குற்றவாளியான ராஜ்குமார் என்கிற வெங்கடேஷ், சோனை முத்தையா, செல்லமுத்து, அய்யப்பன் ஆகிய 4 பேருக்கும் ஒவ்வொரு கொலைக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை என நான்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த செல்வம் என்கிற வெங்கடேஷூக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் வழக்கில் உச்சநீதிமன்றமானது, ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.
இதன்மூலம் கள்ளக்கிணறு கொலைக்குற்றவாளிகள் 4 பேரும் ஆயுள்காலம் முழுக்க சிறையில் இருப்பார்கள். இந்த வழக்கில் 101 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாட்களில் 51 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 7 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்குரைஞர் கனகசபாபதி தெரிவித்தார். இந்த வழக்கில் வக்கீல்கள் கனகசபாபதி, கே.என்.சுப்பிரமணியம், லதா மகேஸ்வரி ஆகியோர் ஆஜராகினர்.
இதையும் படிங்க: பழனி கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு வழக்கு; இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு! - Palani Kriwala Path Encroachment