சென்னை: வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் சிஎம்ஆர்எல் (CMRL) பணிக்காக, சாலையில் தடுப்புகள் அமைத்து ஒரு வழியைப் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் வடிவேல் தலைமையில் ஊழியர்கள் பணி புரிந்து வந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக மது போதையில் வந்ததாகக் கூறப்படும் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் ஊழியர்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சாலையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் அமைத்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும், அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
அங்கு பணியிலிருந்த உதவி மேலாளர் வடிவேலுக்கும், பாடகர் வேல்முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வேல்முருகன் வடிவேலுவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தகராற்றில் காயமடைந்த வடிவேலு சிகிச்சை பெற்ற பின் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை பின்னணி பாடகர் வேல்முருகனை விருகம்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் எழுதி வாங்கிக்கொண்டு அவரை விடுவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அறிக்கை ரெடி... நெல்லை விரையும் ஐஜி... ஜெயக்குமார் வழக்கில் அடுத்தது என்ன? - Jayakumar Case Report