ராமநாதபுரம்: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சப்ரா பதக் என்பவர் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார். நதிகள், காடுகள் உள்ளிட்டவற்றில் ராமர் இருப்பதாகவும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாத்திரையை மேற்கொண்டார்.
இந்நிலையில் ராமேஸ்வரம் நோக்கி வந்த பெண் துறவி சப்ரா பதக் பரமக்குடியில் கடந்த வெள்ளியன்று இரவு தங்கி மறுநாள் காலை சனிக்கிழமை தனது யாத்திரையைத் தொடங்கியுள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் தன்னை வழிமறித்து காரில் இருந்த ராமர் கொடியைச் சேதப்படுத்தி, 'ராமர் இங்கில்லை உடனே திரும்பி போ' என மிரட்டி கற்களைக் கொண்டு தனது காரை சேதப்படுத்தி, தன்னையும் தாக்கியதாகக் கடந்த சனியன்று மாலை காலதாமதமாகப் புகார் ஒன்றை பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்திருந்தார்.
இதையடுத்து பரமக்குடி டிஎஸ்பி உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சனிக்கிழமை இரவு வரை சப்ரா பதக் யாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததுடன் சப்ரா பதாக் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர் ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார்.
குறிப்பாக முதலில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை பரமக்குடி அருகே தடுத்து நிறுத்தித் தாக்கியதாக தெரிவித்த நிலையில், அடுத்து விசாரிக்கையில் சத்திரக்குடி அருகே நான்கு பேர் கொண்ட குழு தன்னை தாக்கியதாகத் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காகத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் சிப்ரா பதக்கின் சகோதரர் சாலையில் உள்ள கற்களைச் சேகரித்து காருக்குள் வைக்கும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த வீடியோவை கைப்பற்றியதன் அடிப்படையில் போலீசார் வீடியோவை பெண் துறவியிடம் காட்டி விசாரித்தனர். அப்போது பெண் துறவி முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் அப்பெண் கொடுத்த புகாரின் மனுவின் அடிப்படையாகக் கொண்டு, பரமக்குடி தாலுகா சார்பு ஆய்வாளர் கொடுத்த புகாரின் பெயரில் பெண் துறவி சிப்ரா பதக் புகார் தெரிவித்த இடத்திற்குச் சென்று போலீசார் பார்வையிட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் சித்ரா பதக், அவரது தந்தை சைலேஷ் பதக், மற்றும் சகோதர அன்கிட் பதக் மூவரும் புகார் மனுவில் கூறிய சம்பவம் ஏதும் நடைபெறாமல் நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு மதக் குழுக்களிடையே பகை உணர்வு, வெறுப்பு, பகைமை எண்ணம் ஆகியவற்றைத் தூண்டும் வகையில், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் 'ராமர் இங்கு இல்லை உடனே திரும்பி போ' என அவர்களை மிரட்டியதாக வதந்தி பரப்பியதாகக் குற்றம்சாட்டி மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
இதனிடையே பெண் துறவி சிப்ரா பதாக், தன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தது அறிந்து இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் வந்திருந்த அவர் உடனடியாக ஞாயிறன்று மதியம் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த பெண் துறவி யாருடைய தூண்டுதலின் பேரில் இவ்வாறு நடந்து கொண்டார், ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்துத் தொடர்ந்து பெண் துறவியுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஹிந்து அமைப்புகளிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே சனிக்கிழமை மதியம் ராமேஸ்வரம் வந்த சப்ரா பதக்கிடம் யாத்திரை தடுத்து நிறுத்த காரணம் என்ன? உங்களுடன் வந்தவர்களே கற்களைச் சேகரித்து வாகனத்தைத் தாக்கியதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, முற்றிலும் இதை நான் மறுக்கிறேன். இது புனித யாத்திரை என்றும், ராமருக்கு ராவணன் இடையூறு அளித்தது போல் எனது யாத்திரைக்கு ராவணன் போல் சிலர் இடையூறு அளித்தனர், அவர்களை ராமர் பார்த்துக் கொள்வார்.
உண்மை நிச்சயம் வெளியே தெரிய வரும் எனவும், இது தொடர்பாகத் தனது வழக்கறிஞர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சட்டப்படி அவர் பதில் அளிப்பதாகத் தெரிவித்தார். பெண் துறவி தாக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் விவாத பொருளாகப் பேசப்பட்டு வந்த நிலையில், பெண் துறவி தன் மீது மர்ம நபர்கள் தாக்கியதாக வதந்தி கிளப்பியது தெரியவந்ததையடுத்து பலருக்கும் ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!