சென்னை: திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "சமீபத்திய போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக டெல்லியில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக-வை தொடர்புப்படுத்தி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பொது இடங்களில் பேசி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இது தொடர்பாக விமர்சனங்களையும், திமுகவை தொடர்புப்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டும் வருகிறார். இவ்வாறு திமுகவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.
அதுமட்டும் அல்லாது, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புப்படுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் உத்தரவிடவேண்டும்" என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மெரினா ஜோடிக்கு ஜாமீன்..! சந்திரமோகனுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட கண்டிஷன்..!
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாரயாணன் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை நீதிபதி முன்பு வைத்தனர்.
இதனை அடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-11-2024/22854774_etvwc.jpg)
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்