திருப்பத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் சூறாவளி பரப்புரை செய்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பாஜக கூட்டணியில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் களம் காணும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அத்தொகுதியில் தீவிர பரப்புரை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஏ.சி.சண்முகத்தின் தேர்தல் பரப்புரைக்காக தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும், தொண்டர்கள் மாலை 7 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து மூன்று மணி நேரமாக காத்திருந்தனர்.
மேலும், தேர்தல் விதிமுறைப்படி 10 மணிக்கு மேல் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என்பதால், பறக்கும் படை அதிகாரிகள் 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரையில் கூடாது என தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கூறியதால், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து 10.30 மணியளவில் வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்த ஏ.சி.சண்முகம் காரில் இருந்தபடியே கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து கைகுலுக்கி விட்டு, பின்னர் அங்கிருந்து சென்றார். இதனால் ஏ.சி.சண்முகத்தின் பரப்புரைக்காக 3 மணி நேரம் காத்திருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர்.
மேலும், தேர்தல் பரப்புரை முடிந்து காரில் இருந்தபடியே ஏ.சி.சண்முகம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்ததால், கட்சி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.