தேனி: தமிழகம் முழுவதும் பல்வேறு மைங்களில் டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு இன்று நடத்தப்பட்டது. இந்நிலையில், கம்பம் பகுதியில் உள்ள கூடலூர் சாலையில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி குருப் 4 தேர்வு மையமாக இயங்கியது. இந்த மையத்தில் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான தேர்வர்கள் வந்தனர்.
இதில் 10க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 9 மணிக்கு மேல் தேர்வு எழுத வந்துள்ளனர். ஆனால், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைப்படி, தேர்வர்கள் விரைவாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். அதாவது, 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. இதனால் தேர்வுப் பணியில் ஈடுபட்டுருந்த அதிகாரிகள் தாமதமாக வந்த தேர்வர்களைத் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த மாணவிகள், அவர்களது உறவினருடன் கல்லூரி முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தேனி தெற்கு காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாணவிகள், “இந்த தேர்விற்காக மிகவும் சிரமப்பட்டு தயாராகி வந்ததாகவும், ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததற்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படாதது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. இது போன்ற நேரங்களில் தயவு கூர்ந்து தேர்வு எழுத அனுமதி அளித்தல் வேண்டும்” எனக் கூறினர். இதனையடுத்து, காவல்துறை நடத்திய சுமூக பேச்சு வார்த்தைக்குப் பின், மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு தேர்வெழுதாமல் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு; எப்படி விண்ணப்பிப்பது?