வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் முகிலன் (48). இவரது மனைவி பரிமாளா. இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர் சத்துவாச்சாரி டபுல்ரோடு பகுதியில் கடந்த 6 வருடமாக தென்றல் எண்டர்பிரைசஸ் எனும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், முகிலன் வரச் சொன்னதாக கடைக்கு வந்த நண்பர் இன்று கடையை திறந்து பார்த்த போது முகிலன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இறப்பதற்கு முன் முகிலன் பெற்றோர், மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர் என 12 பேருக்கு தனித்தனியாக உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அதில், "ஜெகதீசன் என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். எப்படியாவது ஜெகதீசனிடம் உள்ள பணத்தை வாங்கி எல்லோருக்கும் கொடுத்துவிடலாம் என நம்பிக் கொண்டு இருந்தேன். ஆனால், அவர் பணம் கொடுப்பதாக இல்லை. என்னை ஆள் வைத்துத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருந்தார்.
அப்படி ஏதாவது நடந்தால் நான் ஏமாற்றப்பட்டது யாருக்கும் தெரியாது. எனக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்தது. அதை நான் யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் என்னைக் கொலை செய்யும் முன் நானே இறந்துவிடுகிறேன்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், பணம் கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அந்த தவறை திருத்திக்கொள்ள இந்த முடிவு என்னை மன்னித்துவிடுங்கள். நான் இறந்த பிறகாவது இந்த அரசாங்கம் ஜெகதீசனிடம் இருந்து பணத்தை மீட்டுக் கொடுக்கும் என்று இந்த முடிவை எடுக்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த முகிலன் எழுதிவைத்த கடிதங்களை கைப்பற்றிய சத்துவாச்சாரி போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் பலி!