சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் 8 பேர் தாமாக வந்து காவல்துறையிடம் சரணடைந்த நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து இன்று காலை முதல் அவருடைய உறவினர்கள், ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், காவல்துறை அதிகாரிகள் அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் பெரியார் அன்பனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பெரியார் அன்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் பொய்யான குற்றவாளிகள். சிசிடிவிகளை ஆராய்ந்து பார்க்கையில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இவர்கள் இல்லை என எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கொலை செய்தவர்களை காவல்துறையினர் பிடிக்கவில்லை, கொலையாளிகள் தாமாக அண்ணா நகர் கே-4 காவல் நிலையத்தில்ல் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை. இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டது யார்? கொலை செய்தவர்கள் யார் என்று அரசுக்கும், காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரியும். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அன்ஃபிட்டாக இருப்பவர்களை எதற்காக காவல்துறையில் வைத்துள்ளனர்? மாநிலக் கட்சித் தலைவருக்கு எந்தவித பாதுகாப்பும் இந்த அரசாங்கம் கொடுக்கவில்லை. பொதுமக்களையும், தொண்டர்களையும் அச்சுறுத்தும் விதத்தில் காவல்துறையினர் நடந்து கொண்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.