தேனி: பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி ஹைஸ்கூல் தெருவில் யு.பி.முருகன் மற்றும் பிரபு ஆகிய இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபு என்பவர் அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பின்னத்தேவன் பட்டியில் அரசு மதுபான கடையில் பார் நடத்தும் உரிமை பெற்று பார் நடத்தி வருகிறார்.
அதேபோல், யு.பி.முருகன் என்பவரும் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையின் அருகே உரிமம் பெற்று பார் நடத்தி வந்துள்ளார். இதில் அரசு மதுபானக் கடைகளில் மது விற்பனைக்கு விடுமுறை விடும் நாட்களில், பார் நடத்தும் யு.பி.முருகன் மற்றும் பிரபு இருவரும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்து, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் (மே 1) தேனி அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரபு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தபோது, காவல்துறையினர் பிரபுவைக் கைது செய்ததோடு 900 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், யு.பி.முருகன் தகவல் கொடுத்ததன் அடிப்படையில்தான் தேனி அல்லிநகரம் காவல்துறையினர், சட்டவிரோதமாக விற்பனை செய்த மது பாட்டில்கள் பிடிபட்டது என நினைத்து கோபமடைந்த பிரபு, நேற்று (மே 2) இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள வடுகபட்டி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து வந்த யு.பி.முருகனை அரிவாளால் சரமாரியாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியதாகவும், இதில் யு.பி.முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரிழந்த யு.பி.முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து கொலை செய்து பிரபுவைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல்; சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடைகளுக்கு தீ வைப்பு; போலீசார் தடியடி!