திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அம்சா. இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது மகனான செய்யது தமீம் (31) மேலப்பாளையம் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வந்தார். பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளும் இவர் செய்து வந்தார்.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள தனது கடையில் செய்யது தமீம் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவில் வீடு திரும்பினார். பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக சொல்லிவிட்டு மீண்டும் கடைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் தமீம் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும், ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக செய்யது தமீம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டதுடன் கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாநகர காவல் துறையின் மோப்ப நாய் பரணி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தினால் மேலப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்களது குடும்பத்திற்கான சொத்து பல்வேறு இடங்களில் உள்ள நிலையில் சொத்து பிரச்சனைக்காக இந்த கொலை நடந்துள்ளதா ?அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கா? 75 லட்சம் அளவில் பறிமுதல்.. நெல்லையில் பரபரப்பு!