சென்னை: அனைத்து வயது பெண்களும் மார்பகத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என தமிழ்நாடு அரசு பன்னாேக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குனர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதனால், அக்டோபர் மாதம் 'பிங்க் அக்டோபர்'ஆக (Pink October) கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குனர் மணி கலந்து கொண்டு, பிங்க் நிற பலூன்கள் வானத்தில் பறக்க விட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மணி கூறும்போது, "மார்பகப் புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ மாணவிகள் பிங்க் நிற ஆடை அணிந்தும் பிங்க் நிற பலூன்கள் பறக்க விட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
பூப்படைதல் காரணமா?: தற்போது 20 வயது முதல் 55 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்கள் அதிக அளவு துரித உணவுகள் உட்கொள்வதாலும், 12 வயதிற்கு முன்பே பெண்கள் பூப்படைவதாலும், புகைப்பிடித்தல், மது குடித்தல், உடல் பருமன் அதிகரிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது" என்றார்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயமாக மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 54 வயதிற்கான மேற்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
குறிப்பாக, மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் வரும் என்பதால் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் நான்கு பிரிவுகளாக புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு வரும் பொழுது முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அட்டை கொண்டு வந்தால் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும்" என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்