திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் நேற்று தபால் மூலம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் வெடிகுண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சிறுது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராஜா என்பவர் அந்த கடிதத்தை தான் அனுப்பவில்லை, இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
மேலும், கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வதந்திகளை கிளப்பவே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட வெடிகுண்டு பிரிவு நிபுணர் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில், ரீட்டா என்ற மோப்ப நாயுடன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஆம்பூர் நகர காவல் நிலையம் மற்றும் பல அரசு அலுவலகங்களில் ஏதேனும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டின் டாப் 1 இடத்தை பிடித்த லியோ!