தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, பெண் ஒருவர் ரூபிநாத் என்பவரை அழைத்துக் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அந்தப் பெண் 'தான் ஒரு ஐஏஎஸ் (IAS) அதிகாரி என்றும், உத்தரப்பிரேதசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மங்கையர்க்கரசி (44) என்பதும், கல்வித்துறை உதவி செயலாளர் என்று பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
மேலும், அவருடன் அவருக்கு உடந்தையாக வந்தவர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் (42) என்பதும், இவர் பாஜகவில் திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவின் மாவட்டத் தலைவராகவும் இருந்து வருவது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மங்கயைர்கரசி மற்றும் அவருடன் வந்த ரூபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
துப்பாக்கி கேட்டு விண்ணப்பம்: இதற்கிடையே, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது கணவருடன் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற மங்கையர்கரசி, துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட எஸ்பி சிலம்பரசன், இந்த இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
விசாரணையில், அவர் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்பதும், போலியாக ஐஏஎஸ் அதிகாரி என பலரிடம் கூறி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து, நெல்லை போலீசார் மங்கையர்க்கரசி மீது நடவடிக்கை மேற்கொள்ள இருந்தனர். இந்நிலையில், சிப்காட் காவல் நிலைய போலீசார் மங்கையர்கரசி மற்றும் பாஜக பிரமுகர் ரூபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “அச்சத்தின் காரணமாக கைதிகள் குறைகளை சொல்வதில்லை” - உயர் நீதிமன்றம் கருத்து!