தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து பாஜக முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வருகை புரிகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தஞ்சை வந்தார். அதனைத் தொடர்ந்து, வேட்பாளர் முருகானந்தத்தைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுதாகர் ரெட்டி கூறியதாவது, "2014 முதல் 2024 வரை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி நல்ல திறமையான ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊழலற்ற ஆட்சியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுக இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணியாக உள்ளது. பாஜக நாட்டின் சேவையே லட்சியம் என இருக்கிறது, ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்காகவும், ஊழல் செய்வதற்காகவும் உள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள வைகோ காங்கிரஸ் கட்சியை பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. பாஜக தர்மத்தைக் காக்கும் கட்சி, நல்ல திட்டங்கள் வழங்கும் கட்சி. ஆனால் திமுக கட்டப்பஞ்சாயத்து, ஜெயில் டு பெயில், பெயில் டு ஜெயில் என்று கனிமொழி, ஆ.ராசா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் என பலர் உள்ளனர்.
அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை பாஜகவிற்கு புத்துணர்ச்சியாக அமைந்துள்ளது. நிச்சயமாக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையில் வெற்றி பெறுவார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி சனாதன தர்மத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் கோயிலுக்குச் செல்கின்றனர், ஹோமம் செய்கின்றனர். ஆனால், வெளியில் சனாதன தர்மத்தைப் பற்றி பேசுகின்றனர்.
மணல் திருட்டு, நிலம் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் குற்றம், கஞ்சா ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவில்லை, இதுதான் திராவிட மாடலா? மேலும், விவசாயிகள் தண்ணீரின்றி பாதிக்கப்படுகின்றனர்" எனத் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது பாஜக மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.