கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் பாஜக மாநிலத் தலைவரும், கோயம்புத்தூர் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “செய்தியாளர் சந்திப்பிற்கு வாருங்கள் என எந்த செய்தியாளரையும் நான் யாரையும் அழைக்கவில்லை. என்னிடம் வந்தால் கருத்து கிடைக்கும் என்பதால் வருகிறார்கள்.
எடப்பாடியை பார்க்க மக்கள் தயாராக இல்லை: கருத்துச் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார். நான் சொல்வதைத் தான் மோடியும் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ போனால் எவ்வளவு பேர் வருவார்கள் என பார்க்கலாம்?. அவரை பார்க்க யாரும் தயாராக இல்லை. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ போனால் அவரை பார்க்க மக்கள் வரமாட்டார்கள்.
மக்கள் தரிசன யாத்திரை: அதனால் மக்களை அழைத்துச் சென்று பட்டியில் அடைத்து வைப்பது போல் அடைத்து வைத்து, அவர்கள் எழுதி வைத்துப் படிப்பதைக் கேட்க வைக்கிறார்கள். இது ஜனநாயகமா? பிரதமர் மோடி மக்களைத் தரிசிக்க வருகிறார். மக்கள் பிரதமரைப் பார்க்க வருகிறார்கள். ரோடு ஷோவை மக்கள் தரிசன யாத்திரை என்று நாங்கள் சொல்கிறோம். டி.ஆர்.பி. ராஜாவின் அப்பா சமூக விரோதி. அவரின் அப்பாவே சாராயம் விற்று வருகிறார்.
கோபாலபுரத்தின் குடும்பம் சிறையில் இருக்கும்: நூற்றுக்கணக்கான நண்பர்களைக் குடிக்க வைத்துக் கொன்றவர்கள். பல பெண்களின் தாலி அறுத்தவர். எங்களை சமூக விரோதிகள் என்று கூறுவது நகைச்சுவையின் உச்சம். 2024 தேர்தலுக்குப் பின் கோபாலபுரத்தின் ஊழல் குடும்பம் சிறையில் இருப்பார்கள் என மோடி கேரண்டி கொடுப்பார். குடும்ப அரசியலை ஒழிப்பேன், பிரிவினை பேசுபவர்களை அடக்குவேன் என மோடி கேரண்டி கொடுப்பார். ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுக்கும் கேரண்டி உப்பு சப்பு இல்லாததது.
பாஜக மீது போலியான கட்டமைப்பு: சமூக வலைத்தளங்களில் திமுகவின் விளம்பரத்திற்காக சபரீசன் நிறுவனம் 7 கோடியே 33 இலட்சம் 93 ஆயிரத்து 750 செலவு செய்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு பாஜகவின் மீது போலியான கட்டமைப்பு வைத்துள்ளனர். அந்த பிம்பங்கள் எல்லாம் தேர்தலுக்குப் பிறகு உடையும். சமூக நீதி படம் எடுப்பவர்கள் எல்லாம் பணத்திற்குத் தான் எடுக்கிறார்கள். உதயநிதி ஒரு குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? ரோலக்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.
2.50 லட்சம் செல்போன்களை ஒட்டுக்கேட்டுள்ளனர்: விக்ரம் படத்தில் போதைப் பொருள் கடத்தும் தலைவனது பெயரை வைத்துள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து பொருட்களிலும் ஊழல் நடக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டை எதாவது ஒரு ஊடகம் வெளியிட்டால் கூட அந்த சேனல் தமிழக கேபிளில் இருந்து நீக்கப்பட்டு விடும். ஹைதராபாத்தில் 2.50 இலட்சம் செல்போன்களை ஒட்டுக்கேட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் இப்போது கைதாகி சிறையில் உள்ளனர். தமிழகத்திலும் இது நடக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு தகவல் பரிமாறப்படுகிறது: செய்தியாளர்களின் செல்போன்களையும் ஒட்டுக் கேட்கின்றனர். தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. எனது செல்போன், எனது மனைவி, அக்கா, நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களையும் ஒட்டுக் கேட்கின்றனர். 2024ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்திலும் பலர் கைது செய்யப்படுவர். என்னையும், என்னைச் சுற்றியிருப்பவர்களையும் கண்காணித்து டி.ஆர்.பி. ராஜா சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தகவல் பரிமாறப்படுகிறது. இதை வைத்து அவரால் தேர்தல் முடிவை மாற்றிவிட முடியுமா?.
முதலமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை: திமுகவினர் மோசமான ஆட்கள். திமுக ஆட்சி நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. திமுகவிற்கு எதிராக நான் அரசியல் தைரியமாகச் செய்து வருகிறேன். என்னைப் பற்றி திமுகவினர் நடத்திய தாக்குதலுக்குப் பிரதமர் நேற்று பதில் சொல்லியுள்ளார். ஊழல் யுனிவர்சிட்டி வேந்தராகப் பிரதமர் இருக்க வேண்டுமானால், அந்த ஊழல் யூனிவர்சிட்டியின் பெயரே ஸ்டாலின் யுனிவர்சிட்டி என வைக்க வேண்டும். முதலமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை. அரசியலை நேர்மையாகச் செய்ய விரும்புகிறேன்.
மக்கள் வேப்பிலை உடன் காத்திருக்கின்றனர்: ஜனநாயகம் பற்றிப் பேசுவதற்குத் தகுதி இல்லாத நபர் மு.க. ஸ்டாலின். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாது என்பது தான் எதிர்க்கட்சிகளின் விவாதம். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும். கோயம்புத்தூரில் பண அரசியல் என்ற பேயை ஓட்ட மக்கள் வேப்பிலை உடன் காத்திருக்கின்றனர்.
மோடியைக் கருணாநிதி வாழ்த்துவார்: விஜய் ஆண்டனி சமூகப் பொறுப்புடன் பேச வேண்டும். அவர் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தல் வரப் போகிறது. கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றார். அதனால் மோடியைக் கருணாநிதி மேலே இருந்து வாழ்த்துவார்” எனத் தெரிவித்தார்.