மதுரை: மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் 'மத்திய பட்ஜெட் 2024' விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
"தமிழக முதலமைச்சர் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார். உதாரணமாக அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு மதுரையிலிருந்து 143 கி.மீ தூர வழித்தடத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்கிறார். இதற்கு 870 ஹெக்டேர் நிலம் தேவை.
ஆனால் தமிழக அரசு 74 ஹெக்டேர் நிலம் தான் கையகப்படுத்திக் கொடுத்து இருக்கிறது. எப்படி பட்ஜெட்டில் பணம் ஒதுக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்பது பிரதமர் மோடி விரும்பி எடுத்த முடிவு. அப்போதைய தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் வேறு இடத்திற்கு எய்ம்ஸ் கேட்டு கோப்பு அனுப்பினார்கள்.
ஆனால் பிரதமர் மோடி தான் மதுரைக்கு முக்கியத்துவம் அளித்து எய்ம்ஸ் அமைய வாய்ப்பளித்தார். மதுரை எய்ம்ஸ் என்பது 250 கோடி - 300 கோடி என மற்ற மாநிலங்களில் அமைக்கப்படும் எய்ம்ஸ் போன்றது அல்ல. ஜப்பான் நிதியுதவி உடன் 1800 கோடி மதிப்பீட்டில், டெல்லி எய்ம்ஸ் போன்று அமைய உள்ளது. வட இந்தியாவிற்கு டெல்லி எய்ம்ஸ் போல, தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் அமைய பிரதமர் விரும்புகிறார்.
அது வருகிற 2026ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் தமிழகத்தில் அமையும். மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என, தமிழக அரசு எய்ம்ஸ் அமைய நிலம் கையகப்படுத்துதல், உள்ளே உள்ள மரங்களை வெட்டுதல் என ஒவ்வொரு கோப்பிற்கும் மாதக் கணக்கில் கால தாமதம் செய்து, பழியை மத்திய அரசு மீது போடுகிறது" என குற்றம்சாட்டினார்.
எய்ம்ஸ் வர விடாமல் திமுக தடுக்கிறது: தொடர்ந்து பேசிய அவர், திட்டமிட்டபடி 2026 இல் எய்ம்ஸ் மதுரையில் அமையும். ஆனால் அது நடைபெற விடாமல், மத்திய அரசு மீது குற்றம்சாட்டி, 2026 தேர்தலைச் சந்திக்க திமுக முயல்கிறது. அனைத்து மத்திய அரசு திட்டங்களும் விரைவில் தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது என அரசியல் செய்கிறது திமுக.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 12 சதவீத ஓட்டுகள் வழங்கி தமிழக மக்கள் நம்மை ஒரு அரசியல் கட்சி என அங்கீகரித்து, நமது செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை தமிழகத்தில் ஆளுகிற கட்சியாக கொண்டு வரலாமா? வருகிற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கு நாம் இன்னும், ஜாக்கிரதையாக, உத்வேகத்தோடு உழைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: “பட்டால் தான் தெரியும்.. விஜய் பட்டு தெரிந்து கொள்வார்” - தவெக குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு!