சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் அட்டவணை வந்துவிட்டது. முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.
தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை பாஜவுக்கு அளிப்பார்கள். பணம், பரிசுப் பொருள் கொடுப்பது தான் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அவைகளை கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கையை தமிழகத்தில் வேகமாக செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
மேலும், தேர்தலுக்கான நாட்கள் மிக்குறைவாக உள்ளதாகவும், 18 நாள்தான் பிரசாரத்திற்கு உள்ளதாகக் கூறியவர் பிரச்சாரத்திற்கு இது மிக மிகக் குறைவான நாட்கள் தான் என தெரிவித்தார். எதிர்வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களைத் தாண்டி வெற்றி பெற உழைப்போம் எனவும், 18ஆம் தேதி மோடி கோவை வருகிறார்.
அதைத் தொடர்ந்து மறுநாள் சேலம் வருகிறார். கூட்டணி விரைவில் இறுதி பெறக்கூடிய நிலையில், மோடி இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகிறார். விரைவில் கூட்டணி முடிவு பெறும் எனவும் அவர் தெரிவித்தார். மக்களவைத் தொகுதிகளோடு சேர்த்து, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றும், 18 நாளில் தேர்தலை நடத்துவதன் மூலம் பணம் விநியோகம், பரிசுப்பொருள் விநியோகம் ஆகியவற்றை தடுக்கும் வகையிலான யுக்தியாக இது இருக்கலாம் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. களம் எங்களுக்கு சாதகமாகவே உள்ளது. மக்கள் பாஜக தலைமையிலான அணிக்கு வெற்றியைத் தேடி தருவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வரின் கருத்து கபட நாடகம் போல உள்ளது. 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்கள் யாரும் அங்கே சிறையில் இல்லை. கைதும் குறைந்திருக்கிறது” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்?” - பிரதமரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!